நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நீடூர் கீழத்தெருவில், இளங்கோவன் என்பவர் கிராம நாட்டாமையாக நீடிப்பது தொடர்பான பிரச்னை, தேர்தல் முன்விரோதம் ஆகிய காரணங்களால், இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது. இதில் தங்கமணி(32), இளவரசன்(36) ஆகிய 2 பேர் கடந்த வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்டனர்.
இக்கொலை தொடர்பாக 15க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, திருமுருகன், வினோத், மான்சிங், கஜேந்திரன் ஆகிய 4 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், வேல்முருகன்(32), நவீன்ராஜ்(20) ஆகிய 2 பேரை மயிலாடுதுறை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களைத் தீவிரமாகத் தேடியும் வருகின்றனர்.