மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சென்ற பிப்ரவரி மாதம் கொண்டல் முருகன் கோயிலிலிருந்த பல லட்சம் மதிப்பிலான மூன்று ஐம்பொன் சிலைகள் திருடுபோனது. இது தொடர்பாக சீர்காழி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இது சம்பந்தமாக காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து சிலையை விரைவாக கண்டுபிடிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்துகொண்டு கூட்டத்தில் பேசினார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, "தமிழ்நாட்டில் கோயில் சிலைகள் காணாமல்போவது குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஐஜியாக இருந்த பொன். மாணிக்கவேல் பணிக் காலத்தை அரசு நீட்டித்து இருக்க வேண்டும்.
நீட் தேர்வை காங்கிரஸ், திமுக ஆட்சியில் இருக்கும் பொழுது 2010ஆம் ஆண்டு கொண்டுவந்தனர். அவ்வாறு கொண்டுவந்த நீட் தேர்விற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பாஜகவிடம் கூறி 3 ஆண்டுகள் விலக்கு பெற்றிருந்தார்.
நீட் தேர்வை ரத்து செய்யக் கூடாது என நீதிமன்றத்திற்குச் சென்று தடை உத்தரவை காங்கிரஸ் கட்சியில் இருக்கக்கூடிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் வாங்கினார். காங்கிரஸ், திமுக நீட் தேர்வு விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது.
தமிழ்நாட்டிலே மாணவர்கள் படிக்கக் கூடாது என்ற எண்ணத்தில் திமுக நீட் தேர்வு விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. நீட் தேர்வு அனிதா உயிரிழந்த விவகாரத்தில் திமுக மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு தொடுத்திருந்தால் மீண்டும் நீட்தேர்வு விவகாரத்தில் மாணவர் தற்கொலைகள் நடந்திருக்காது.
எனவே அரசு, திமுக, காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு தொடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.