மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதால் அந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ராமலிங்கம், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சுரேஷ்குமாரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது, தோழமை கட்சிகளான காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர் உடன் இருந்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மணிசங்கர் ஐயர், "நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடைசி தேர்தலாக இருக்கும். தமிழக மக்கள் புத்திசாலியாக இருப்பதால்தான் பாஜக ஆட்சியை மக்கள் ஏற்றுக் கொள்வதில்லை" என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த திமுக வேட்பாளர் ராமலிங்கம், "தான் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்று, நாடாளுமன்றம் சென்றதும், நதி நீர் இணைப்பு குறித்து தனது குரல் ஓங்கி ஒலிக்கும்" என்றார்.