நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, திருக்குவளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். நாகையிலுள்ள 12 அரசு மருத்துவமனைகளில் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உள் மற்றும் வெளி நோயாளிகளாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கூடுதல் அறைகள் ஒதுக்கப்பட்டு நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழ்நிலையில் நாகை மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் கலா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, "கடந்த அக்டோபர் மாதம் 25,680 வெளி நோயாளியாகவும் 6,664 பேர் உள்நோயாளியாகவும் காய்ச்சல் தொடர்பாகச் சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 77 பேருக்கு சிகிச்சையாக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளி நோயாளியாகவும் 3,000க்கும் மேற்பட்டோர் உள்நோயாளியாக இருக்கின்றனர். இதில் நான்கு பேருக்கு மட்டுமே டெங்கு காய்ச்சல் இருக்கிறது. காய்ச்சல் தொடர்பான பரிசோதனைகளுக்காக அதிநவீன உபகரணங்களைத் தமிழ்நாடு அரசு நாகை அரசு மருத்துவமனைக்கு வழங்கியிருக்கிறது.
காய்ச்சல் ஏதேனும் ஏற்பட்டால் தனியார் மருத்துவமனைக்குச் செல்லாமல் அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருவள்ளுவருக்கு காவித் துண்டு அணிவித்த செயல் - அர்ஜுன் சம்பத் அதிரடி கைது!