மயிலாடுதுறையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மாவட்ட அளவிலான குத்துச்சண்டைப் போட்டிகள் கடந்த புதன்கிழமை நடத்தப்பட்டது. இதில், மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி மற்றும் சீர்காழி தாலுகாக்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.
இந்தப் போட்டியில் மயிலாடுதுறை பல்லவராயன்பேட்டை நரிக்குறவர் காலனியில் செயல்படும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப் பள்ளியில் பயிலும் 13 மாணவர்கள் கலந்துகொண்டு, அனைத்து மாணவர்களும் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.
குறிப்பாக, இப்பள்ளியின் 7ஆம் வகுப்பு மாணவர்கள் ரித்தீஷ், சாமுவேல், சதீஷ், வெற்றிவேல், அனுஷ்கா ஆகியோர் தங்கப்பரிசினை வென்றனர். மேலும் அடுத்த மாதம் திருச்சியில் நடைபெறும் மாநில அளவிலான குத்துச்சண்டைப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளனர்.
இம்மாணவர்களின் திறமையை பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஆசைத்தம்பி கண்டறிந்து, அதற்கு தகுந்தாற்போல் பயிற்சி அளித்து அவர்களை முன்னேற்றும் பணியில் ஈடுபடுத்தி வருகிறார்.
தங்கள் பள்ளியிலிருந்து ராஜந்தோட்டத்தில் உள்ள சாய் விளையாட்டு மைதானத்திற்குச் சென்று பயிற்சி பெறுவதாகவும், அதற்கு சிரமமாக இருப்பதாகவும், தங்கள் பள்ளியிலேயே விளையாட்டு மைதானம் அமைத்துத் தந்தால் விளையாட்டுத் துறையில் இன்னும் பல சாதனைகளைப் படைப்போம் என்றும் மாணவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:கர்நாடகத்தில் கொத்தடிமைகளாக இருந்த ஆம்பூர் இருளர்கள் மீட்பு