நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியத்தில் கிள்ளுக்குடி, மோகனூர், வண்டலூர் ஆகிய மூன்று ஊராட்சிகளில் தூய்மைக் காவலர்கள் எட்டு பேர் கடந்த நான்காண்டுகளாகப் பணியாற்றிவருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுகவைச் சேர்ந்தவர்கள் ஊராட்சி மன்றத் தலைவர்களாக வெற்றிபெற்றுள்ளனர். நான்கு ஆண்டுகளாகப் பணியாற்றிவந்த தூய்மைக் காவலர்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுவதால், அவர்கள் 8 பேரையும் அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் திடீர் பணியிடை நீக்கம் செய்ததாகக் கூறப்படுகின்றது.
இதனால் அதிர்ச்சியடைந்த தூய்மைக் காவலர்கள் அவர்களிடம் இதுகுறித்து கேட்டபோது, 20 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் மீண்டும் பணியில் அமர்த்த கையூட்டு கேட்டுள்ளனர். பின்னர் இதனால் பாதிக்கப்பட்ட 8 தூய்மைப் பணியாளர்களும் ஆட்சியரிடம் இது குறித்து புகார் மனு அளித்தனர்.
தொடர்ந்து, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பணியிடை நீக்கம் செய்துள்ள தங்களை, மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று கோரிக்கைவைத்துள்ள அவர்கள், தாங்கள் தொடர்ந்து கிராம பகுதிகளில் சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டுவருவதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: உணவின்றி தவித்த விவசாய கூலியாட்களுக்கு உதவிக்கரம் நீட்டிய வருவாய்த்துறை