மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஆறு பாதி ஊராட்சி விளநகரில் அருள்மிகு வேயுறு தோளியம்மை உடனாகிய துறைகாட்டும் வள்ளலார் கோயிலில் நாளை குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதற்காக நடைபெற்ற யாகசாலையில் தானியம் வைக்கும் நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்று வழிபாடு நடத்தினார்.
அப்போது, கோயிலில் அமைந்துள்ள வன்னி மரத்தடி அருகில் தென்னங்கன்று நடுவதற்காக கோயில் நிர்வாகத்தினர் குழி தோண்டியபோது, சுமார் ஒரு அடி உயரமுள்ள சனி பகவான் கற்சிலை ஒன்று மண்ணின் அடியில் தென்பட்டது. இதையடுத்து, கோயில் நிர்வாகத்தினர் பத்திரமாக வெளியில் எடுத்து, தருமபுரம் ஆதீனம் குருமகா சந்நிதானத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்துபார்த்த அவர் சனி பகவானுக்கு வன்னி மரம் தல விருட்சமாக விளங்குவதாகவும், இந்த சனி பகவான் திருமேனி வன்னி மரத்தடியிலேயே கண்டெடுக்கப்பட்டுள்ளதால், அச்சிலையை வன்னி மரத்தடியிலேயே மேடை அமைத்து பிரதிஷ்டை செய்யச்சொல்லி அருளினார். இதையடுத்து அச்சிலை வன்னி மரத்தடியிலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இதையும் படிங்க: கரோனா பரவலைத் தடுக்க ஸ்மார்ட் கருவி: நிதியுதவி வழங்கிய மத்திய அரசு