மயிலாடுதுறை: சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே கட்டாய தடுப்பூசி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இயற்கை வழி வாழ்வியலர்கள் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தடையை மீறி நடைபெற்ற ஆர்பாட்டத்தில் இயற்கைவழி வாழ்வியலர்கள் கூட்டமைப்பு, தமிழ் பேரரசு கட்சி பொது செயலாளர் இயக்குநர் கௌதமன், சித்த மருத்துவர் திருத்தனிகாச்சலம், மக்கள் அறிவியல் இயக்கம் மருத்துவர் பிரேமா கோபாலகிருஷ்ணன், திருநங்கை ரோஸ், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து ஒன்றிய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், கரோனா தடுப்பூசி கட்டாயப்படுத்துவதை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஆர்ப்பாட்டத்திற்கு காவல் துறை தடை விதித்திருந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்தவர்களில் ஒரு பகுதியினரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் தமிழ் பேரரசு கட்சி பொதுச்செயலாளர் கௌதமன் தலைமையிலான மற்றொரு பகுதியினர் பேரணியாக திடீர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து கைது செய்தவர்களை சீர்காழி காவல் துறையினர் விடுவித்தனர். முன்னதாக ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு அமைக்கப்பட்டிருந்த மேடை உள்ளிட்டவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: TNSTC Employees salary: போக்குவரத்துத்துறைப் பணியாளர்களுக்கான 14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை... அரசின் முடிவு என்ன?