மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கருப்பூர் ஊராட்சி திருக்குளம்பியம் கிராமத்தில் அண்மையில் இறந்த நாகராஜ் என்பவரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்து கிராமத்தில் உள்ள ஒரு பிரிவினர் போராட்டம் நடத்தினர்.
இதனால் அங்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டு, வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உடலை அடக்கம் செய்தனர். பேச்சுவார்த்தையில், மனு அளித்தால் சுடுகாட்டை வேறு இடத்திற்கு மாற்றி கொள்ள நடவடிக்கை எடுப்பதாக வருவாய் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உறுதி அளித்திருந்தனர்.
இந்நிலையில் காலங்காலமாக அடிப்படை வசதி இல்லாமல் இருக்கும் சுடுகாட்டை அதே இடத்தில் நீட்டித்து அங்கு மயான கொட்டகை அமைத்து, சாலை வசதி, தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சுடுகாட்டின் அருகே வீட்டை கட்டிக்கொண்டு சுடுகாட்டின் இடத்தை மாற்ற கோருவது நியாயமற்ற செயல் எனவும், ஒரு வாரத்திற்குள் சுடுகாட்டிற்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வருவாய் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் கிராம மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்போவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.