மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் காணும் பொங்கல் தினத்தில் புகழ்பெற்ற தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் வழக்கமாக ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும் கூடுவார்கள்.
இந்த ஆண்டு கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கடற்கரை பகுதிகள், பூங்காக்கள் உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பண்டிகை தினங்களில் கூடுவதற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்தது.
இதனால், காணும் பொங்கல் பண்டிகை தினத்தில் கடற்கரை பகுதிகளில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், காணும் பொங்கல் தினத்தில் டேனிஷ் கோட்டை கடற்கரை பகுதிக்கு ஏராளமான வாகனங்களில் வந்த சுற்றுலா பயணிகளை காவலர்கள் திருப்பி அனுப்பினர். மேலும், பொறையார் காவலர்கள் தரங்கம்பாடி கடற்கரை நோக்கி செல்லும் சாலை மற்றும் கடற்கரையில் பல இடங்களில் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனால் தரங்கம்பாடி கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் துறைமுகம் பகுதியில் கூடினர். போலீசார் எச்சரிக்கையை மீறி கூட்டம் கூடியது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: காணும்பொங்கலை ஒட்டிப் பூப்பறிக்கும் விழா - இது கொங்கு மக்களின் கலாசாரம்