மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா காலமநல்லூர் கிராமத்தில் மஞ்சளாற்றின் குறுக்கே கடல்நீர் உட்புகாமலிருக்க 7 கோடியே 89 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டும் பணியை இன்று (பிப்.14) முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
காவிரி ஆற்றின் கடைமடையின் ஒரு பகுதியான காலமநல்லூர், பிள்ளை பெருமாநல்லூர், கிடங்கல், மருதம்பள்ளம், மாமாகுடி, திருக்கடையூர் ஆகிய பகுதிகளில் சுனாமி பேரழிவுக்கு பிறகு மஞ்சளாற்றின் வழியாக கடல்நீர் உட்புகுந்து வருவதால், சாகுபடி நிலங்களின் தன்மை உப்பாக மாறி விவசாயம் செய்வது கேள்விக்குறியாகியுள்ளது.
கடல்நீர் உட்புகாதவாறு தடுப்பணை அமைத்தால் விவசாயமும், நிலத்தடி நீரும் பாதுகாக்கப்படும் எனக்கூறி விவசாயிகள், பொதுமக்கள் கடந்த 40 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துவந்தனர்.
இந்நிலையில், பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்து வந்ததையடுத்து ரூ.7 கோடியே 89 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்ட பிப்ரவரி 12 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. தடுப்பணை கட்டும் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
இதனிடையே தடுப்பணை அமையவுள்ள இடத்தில் இன்று (பிப்.14) பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவர்கள் நடராஜன், தீபா முனுசாமி, ஒன்றிய கவுன்சிலர் டி.என்.குமார், பொதுப்பணித் துறை அலுவலர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர். இத்திட்டத்தின் மூலம் உப்புநீர் உள்ளே புகாமல் இருப்பதோடு, நிலத்தடி நீர் மட்டமும் உயரும் என்பதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:மோடி தொடங்கி வைக்கும் வண்ணாரப்பேட்டை - விம்கோ மெட்ரோ ரயிலை இயக்கும் சிங்கப் பெண்!