மாநிலம் முழுவதும் இன்று மதுபானக் கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிராக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு முழுவதும் அதன் கூட்டணிக் கட்சியினர் கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், நாகை கேசிபி நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் பாண்டியன் இல்லத்தில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தலைமையில் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கறுப்புக் கொடியைக் கையில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மத்திய, மாநில அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களையும் எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முத்தரசன், ”மாநிலத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். மேலும், மது அருந்தினால் எளிதில் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளதை மீறியும், தமிழ்நாடு அரசு கருவூலம் நிரம்பினால் போதும் என்பதாலும், அமைச்சர்களுக்கு கமிஷன் பணம் கிடைப்பதாலும் மதுக்கடைகளைத் திறந்துள்ளது.
மத்திய அரசு கரோனா நிவாரண நிதியாக தமிழ்நாடு அரசு கோரியுள்ள 18 ஆயிரத்து 300 கோடி ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும். மதுக்கடைகளை மூடி மாநிலத்தில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: 'கரோனாவுடன் மேலும் 6 மாத காலம் நாம் போராட வேண்டியிருக்கும்' - ஆட்சியர்