மயிலாடுதுறை: சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றின் கரையின் உள்ளே அமைந்துள்ள நாதல்படுகை திட்டு கிராமத்தில் வசிப்பவர் விவசாயி பாண்டியராஜன். இவரது வீட்டின் கொல்லை புறத்தில் அமைந்துள்ள கழிவு நீர் தொட்டியில் நள்ளிரவில், வழிதவறி அவ்வழியே வந்த மாடு ஒன்று தவறி விழுந்துள்ளது.
காலை கழிவுநீர் தொட்டியில் இருந்து சத்தம் கேட்பதை அறிந்த பாண்டியராஜன் சென்று பார்த்தபோது மாடு தொட்டியில் விழுந்து தவிப்பது தெரியவந்தது. இதனையடுத்து அப்பகுதி இளைஞர்களின் உதவியுடன் மாட்டை மீட்க முயன்றனர். கழிவுநீர் தொட்டியில் அதிகமாக தண்ணீர் இருந்ததால் மீட்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதைனையடுத்து, சீர்காழி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி கழிவுநீர் தொட்டியில் இருந்து மாட்டை பத்திரமாக மீட்டு கரையேற்றினர்.