நாகை மாவட்டம் மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ஏலம் நேற்று (சனி) நடைபெற்றது. ஏலத்தில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். கொள்முதல் செய்ய அரசு அலுவலர்கள் யாரும் வரவில்லை, தனியார் வியாபாரிகள் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4500-லிருந்து ரூ.3200 வரை விலை நிர்ணயம் செய்தனர்.
சென்ற வாரம் ரூ.4700 வரை கிடைத்ததால், இந்த வாரம் விலை ஏறும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், விலை குறைவாக நிர்ணயிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பருத்தி விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், அரசு அறிவித்த விலை ரூ.5515 ஆகும், சென்றவாரம் குவிண்டாலுக்கு ரூ.4700-தான் அளித்தனர். இந்த வாரம் நிச்சயம் அதிகரித்து தருகிறோம் என்று கூறி சென்றனர். ஆனால் தற்போது எங்களது பருத்தியில் ஈரப்பதம் 13% இருப்பதாக கூறுகின்றனர். ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலர்கள் தங்கள் சுய லாபத்திற்காக ஏழை விவசாயிகள் வயிற்றில் அடித்துள்ளனர்.
இந்த வாரம் எப்படியும் அதிக விலை கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் வந்தோம். இந்த பருத்தியை நாங்கள் திரும்ப எடுத்துச்சென்றால் நஷ்டம் ஏற்படும் என்றனர்.
இரண்டு மணிநேரமாக நடைபெற்ற போராட்டத்தில் விவசாயிகளே தங்களுக்குள் ஒரு முடிவுக்கு வந்து, அடுத்த வாரம் அரசு அலுவலர்கள் ஈரப்பதம் அளக்கும் எந்திரத்துடன் வருகை தந்து பருத்தியை கொள்முதல் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டு தாங்கள் கொண்டு வந்த பருத்தியை வேறு வழியின்றி குறைந்த விலைக்கு விற்பனை செய்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.