உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரசுக்கு இதுவரையில் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், உலகம் முழுவதும் நாளுக்கு நாள், கரோனா தொற்று அதிகரித்துவருகின்றது.
இதனைத் தடுக்க தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி, மதுபான பார்கள், திரையரங்குகள் மூடப்பட்டு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. நாகை மாவட்டம் மயிலாடுதுறை உளுத்துக்குப்பை ஊராட்சியில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஊராட்சி மன்றத் தலைவர் ராஜ்குமார் தலைமையில் நிர்வாகத்தினர் பொது இடங்களில் கிருமிநாசினி தெளித்து சுகாதார நடவடிக்கைகளை ஊராட்சியில் உள்ள அனைத்து வீதிகளிலும் மேற்கொண்டனர்.
மேலும் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கி கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு குறித்து வாகன பரப்புரை மேற்கொண்டு பாதுகாப்பாகவும், சுகாதாரமாகவும் இருக்க அறிவுறுத்தினர்.