மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டில் சிகிச்சையில் இருந்த மயிலாடுதுறை சேந்தங்குடியைச் சேர்ந்த ராஜேந்திரன்(61) என்பவர், கடந்த 10ஆம் தேதி கழிவறைக்குச் சென்றபோது உயிரிழந்தார். இறந்தவரின் உடலானது கழிவறையிலேயே பல மணிநேரம் கிடந்ததாகவும், அதனை அப்புறப்படுத்தாமல் அலட்சியம் காட்டுவதாகவும், அங்குள்ள கரோனா நோயாளிகள் வீடியோ பதிவிட்டு குற்றம்சாட்டினர்.
இந்நிலையில் ராஜேந்திரனின் உறவினரான, பேரளம் பகுதியைச் சேர்ந்த ஆலந்தூர் ரவி என்பவர் நேற்று (மே.14) மருத்துவமனைக்கு வந்து இறந்த ராஜேந்திரன் சிகிச்சையில் இருக்கும்போது ஆதார், ஏடிஎம் கார்டு, செல்போன், ரூ.2 ஆயிரம் பணம் ஆகியவற்றை வைத்திருந்ததாகக் கூறி, பணியில் இருந்த அறுவை சிகிச்சை மருத்துவர் சுகுந்தனிடம் கேட்டுள்ளார். இதுதொடர்பாக இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அது கைகலப்பாக மாறியது.
இதில் மருத்துவர் சுகுந்தன், இறந்த கரோனா நோயாளியின் உறவினரை காவல் துறையினர் தடுத்தும், அவரைத் தாக்கும் காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
இச்சம்பவம் குறித்து மருத்துவர் அளித்தப் புகாரின் பேரில் ரவியை, காவல் துறையினர் காவல் நிலையம் அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் இறந்த கரோனா நோயாளியின் உறவினர் தாக்கியதாகக் கூறி, தற்போது மருத்துவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குளத்தை சீரமைக்க கோரி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 5ஆம் வகுப்பு மாணவி கடிதம்!