உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனோ வைரஸ் பரவலைத் தடுப்பு நடவடிக்கை காரணமாக மக்கள் ஒன்று கூடும் இடங்கள், தேவாலயங்களை மூட மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. அந்த வகையில் நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்கன்னியில், புகழ்பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது.
இந்த ஆலயத்திற்கு, தினமும் இந்தியா முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவர். இந்நிலையில், கரோனோ அச்சுறுத்தலைத் தொடர்ந்து பேராலயம் வரும் 31ஆம் தேதி வரை மூடப்படுவதாக, பேராலய நிர்வாகம் அறிவித்துள்ளது. வழக்கமாக நடைபெறும் திருப்பலி வழிபாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், வேளாங்கன்னி பேராலயம் வெறிச்சோடி காணப்படுகின்றது. கிறிஸ்தவர்களின் புனித தவக் காலம் நடைபெற்று வரும் நிலையில், விரதமிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தரும் நிலையில், கரோனோ அச்சம் காரணமாக, பேராலயம் மூடப்படுவது பக்தர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: முகக்கவசம், வென்ட்டிலேட்டர்கள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை