நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருவெண்காடு காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உதவி ஆய்வாளர் கடந்த 29ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற காவலர் பயிற்சிக்கு சென்றுள்ளார்.
பின்னர் கடந்த ஜூன் இரண்டாம் தேதி திருவெண்காடு வந்துள்ளார். அவருக்கு லேசான காய்ச்சல் அறிகுறி இருந்ததால் ஜூன் 4ஆம் தேதி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொண்டார்.
இதில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அதேசம்யம் அவரது மருமகனுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து இருவரும் மயிலாடுதுறை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதனால் திருவெண்காடு காவல் நிலையம் மூடப்பட்டது. தற்போது அருகில் உள்ள நூலகத்தில் தற்காலிகமாக செயல்படுகிறது. அதில் புதிதாக காவலர்கள் நியமிக்கப்பட்டு பணியிலிருந்த காவலர்கள் 19 பேர் மயிலாடுதுறையில் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அச்சமயம் காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்தவர்களின் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.