கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து மருத்துவர்களுக்கான கருத்தரங்கம் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. நாகை மருத்துவக் கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில், கொரோனா பாதிப்பு குறித்தும், நோய்த் தொற்று பரவும் விதம் குறித்தும் காணொலி காட்சி மூலம் மருத்துவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விஸ்வநாதன், கொள்ளை நோய்த் தடுப்பு அலுவலர் லியாகத் அலி ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "கொரோனா பாதிப்பு குறித்து பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்த, மாவட்ட நிர்வாகம் சார்பாக மருத்துவ அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
வெளிநாடுகளிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் நாகை மாவட்டத்திற்கு வந்துள்ள 92 நபர்களில் கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்துடன் 49 பேர், மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளனர். உலகச் சுற்றுலாத் தலமான வேளாங்கண்ணிக்கு வருகை தரும் பயணிகள் கண்காணிக்கப்படுவதுடன், அவர்கள் தங்கும் இடம் குறித்தும் அவர்களின் உடல்நிலை குறித்தும் ஆய்வு செய்ய தனிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது" என்று கூறினர்.
இதையும் படிங்க: கடத்தப்பட்ட இளமதி காவல் நிலையத்தில் ஆஜர்... சாதி மறுப்புத் திருமணத்தில் திடீர் திருப்பம்!