நாகப்பட்டினம் மாவட்டத்தைப் பிரித்து, மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்குவதற்கான கருத்து கேட்பு கூட்டம் மயிலாடுதுறையில் ஜூலை 30ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மாநில முதன்மை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திரரெட்டி, தஞ்சை சரக டிஜஜி ரூபேஷ் குமார் மீனா, நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் பிரவின்நாயர், மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அலுவலர் லலிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாகப்பட்டினம் எம்பி., செல்வராசுக்கு கரோனா தொற்று உறுதியானது. இவரைத் தொடர்ந்து மயிலாடுதுறை எம்பி ராமலிங்கத்துக்கு (72) கரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேல் சிகிச்சைக்காக, அவர் சென்னை அழைத்து செல்லப்பட்டுள்ளார். இதனால் ஜூலை 30ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்திற்கான கருத்துக் கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்ட அலுவலர்கள் மக்களவை உறுப்பினர்களிடம் நெருக்கமாக இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைப் பரவலாக எழுந்துள்ளது.