நாகப்பட்டினம்: கோவிட்-19 நோயிலிருந்து மீண்டு வீடு திரும்பியவருக்கு உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நாகையைச் சேர்ந்த ஒருவர் டெல்லி மாநாடு சென்று வீடு திரும்பியுள்ளார். அவர் குடும்பத்துடன் தனது மாமனார் வீடான சீர்காழிக்கு வந்து, 15 நாட்கள் வசித்து வந்த நிலையில், டெல்லி சமய மாநாட்டுக்குச் சென்றவர்களை சோதனை செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டது.
இச்சூழலில் இவருக்கு கரோனா சோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, திருவாரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 8 வார்டுகள் அடைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
இதனால் பத்து தெருக்களைச் சார்ந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல், வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இச்சூழலில் திருவாரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் 19 நாட்களுக்கு பிறகு ரத்த மாதிரி சோதனை செய்யப்பட்டு நோய் தொற்று இல்லை என்று முடிவு வந்த பிறகு அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அவரை சீர்காழியில் உள்ள அவரது உறவினர்கள் கைதட்டி உற்சாக வரவேற்பு அளித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். சீர்காழி நகர் பகுதியில் கரோனாவால் பீதியடைந்திருந்த மக்கள், தற்போது சற்று மன நிம்மதியை அடைந்துள்ளனர்.