நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள உளுத்துகுப்பை ஊராட்சியில் கடந்த ஏப்ரல் மாதம் ஆண் ஒருவருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியானது. இதனால், அந்தப் பகுதிக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர்.
தற்போது, தொற்று பாதிக்கப்பட்ட நபர் குணமடைந்து வீடு திருப்பியுள்ள நிலையில், 21 நாள்களுக்குப் பிறகு அப்பகுதியில் சீல் வைக்கப்பட்ட தடுப்புகள் அப்புறப்படுத்தப்பட்டன. இதனால், கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கடந்த 21 நாள்களாக கிராமத்தில் முகாமிட்டு சுகாதாரப் பணிகளை மேற்கொண்ட மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், காவல் துறை அலுவலர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அப்பகுதி மக்கள் அவர்களை அமர வைத்து அவர்கள் மீது மலர்களை தூவி கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர், சேவை செய்த அனைவருக்கும் கிராம மக்கள் சார்பில் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். கிராமத்திற்கு வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றப்பட்டதை கிராம மக்கள் கொண்டாடும் வகையில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், வருவாய்த் துறையினர் ஆகியோருக்கு பிரியாணி விருந்து வைத்து மகிழ்ச்சியடைந்தனர்.
இதையும் படிங்க: டீ கடைகளுக்கு சீல்