சமய மாநாட்டிற்குச் சென்று வந்தவர்களில் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து, நாகை மாவட்டத்தில் தொற்று ஏற்பட்ட பகுதிகள் சீல் வைக்கப்பட்டது. இதுவரை 3 ஆயிரத்து 394 பேர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே நாகையில் தனியாக கிளினிக் வைத்து நடத்தி வந்த மருத்துவருக்கு தொடர் இருமலும், காய்ச்சலும் இருந்ததால் தனக்குத் தானே மருத்துவம் பார்த்துள்ளார். இவருக்கு ஏற்பட்ட காய்ச்சலும், தொண்டை இருமலும் தொடர்ந்து அதிகரிக்கவே, சந்தேகமடைந்த அவர் நாகை அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். பரிசோதனையில், அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதனைத்தொடர்ந்து, நாகப்பட்டினம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் மருத்துவரின் குடியிருப்பு மற்றும் கிளினிக் நடத்தி வந்த பகுதிகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு அங்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. தொற்று ஏற்பட்ட நாளிலிருந்து நாகப்பட்டினம் சட்டையப்பர் கீழவீதியில் உள்ள அவரது கிளினிக்கில் 54 நோயாளிகளுக்கு அவர் மருத்துவம் பார்த்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனால், அவரிடம் மருத்துவம் பார்த்த நோயாளிகள் மூலம் கரோனா வைரஸ் இவருக்கு பரவியதா? என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர். இந்த நெருக்கடியான சூழலில் மூன்றாம் கட்டப் பரவல் நாகையில் தொடங்கியிருப்பதற்கான சாத்தியமுள்ளதாக அச்சம் பொது மக்களிடையே தற்போது எழுந்துள்ளது.
மேலும், தனியார் மருத்துவரிடம், மருத்துவம் பார்த்த மற்றும் அவரது குடும்பத்தினர் விவரங்களை சேகரித்து அவர்களை தனிமைப்படுத்தும் பணியில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனா வைரசை கட்டுப்படுத்த களத்திலிறங்கும் ஸ்மார்ட் சிட்டிகள்!