கரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டபோது, தமிழ்நாடு அரசு கட்டுமானப் பணிகளுக்கும், கட்டுமானப் பொருட்களுக்குமான போக்குவரத்துக்கு விலக்கு அளித்திருந்தது. இதனால் 2 மாதங்களாக முடங்கிக் கிடந்த கட்டுமானத் தொழில் மீண்டும் நடைபெறத் தொடங்கியது.
ஆனால், தற்போது மீண்டும் கோர தாண்டவம் ஆடும் வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்க 24ஆம் தேதி முதல், பொதுப்போக்குவரத்திற்கு மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல கடுமையான கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு விதித்துள்ளது.
சோதனைச்சாவடி வழியாக வரும் அனைத்து வாகனங்களையும், காவல் துறையினரின், கடும் சோதனைக்குப் பின்னரே மாவட்டத்திற்குள் உள்ளே நுழைய அனுமதிக்கின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு கட்டுமானப் பணிகளுக்கும், கட்டுமானப் பொருட்களுக்குமான போக்குவரத்துக்கும் விலக்கு அளித்திருந்தது.
ஆனால், தற்போது மாவட்ட எல்லைச் சோதனைச் சாவடிகளில் கட்டுமானத் துறைக்கு தேவையான சிமென்ட், செங்கல், கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களைக் கொண்டு வரும் வாகனங்களை சோதனை என்ற பெயரில், காவல் துறையினர் அனுமதிக்க மறுத்து வருகின்றனர்.
இதன் காரணமாக கடந்த 3 நாட்களாக மீண்டும் கட்டுமானத் தொழில் முடங்கி கிடப்பதாகவும், கட்டுமானத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, நாகை தமிழ்நாடு கட்டுமானப் பொறியாளர் சங்கத்தினர் சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயரிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.