மயிலாடுதுறையில் இந்திய விளையாட்டு ஆணைய ராஜீவ் காந்தி சிறப்பு சரக விளையாட்டு பயிற்சி மையம் உள்ளது. இந்த மையத்தின் வளாகம் முன்பு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சிலை உள்ளது. ராஜீவ் காந்தியின் பிறந்த நாள், நினைவு நாட்களில் காங்கிரஸ் கட்சியினர் இச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது வழக்கம்.
அதன்படி, இன்று (ஆக.20) ராஜீவ் காந்தியின் 76ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவிக்க முன்னாள் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பண்ணை சொக்கலிங்கம் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் சென்றுள்ளனர்.
கரோனா ஊரடங்கு காரணமாக அவர்களை வளாகத்திற்குள் அனுமதிக்க முடியாது என்று பயிற்சி மைய காவலர் தடுத்து நிறுத்தி மாலை அணிவிக்க அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து அவர்கள் வாயிலில் நின்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அலுவலர்கள் சென்று பேச்சுவார்த்தை நடத்திய பின் மாலை அணிவிக்க அனுமதி வழங்கப்பட்டு, அதன்பிறகு ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து சென்றனர்.