மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் கோமல் ஆர்கே அன்பரசனை ஆதரித்து எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெஹ்லான் பாகவி, தமிழ்நாடு முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் முஸ்தபா ஆகியோர் பரப்புரையில் ஈடுபட்டனர்.
அப்போது எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெஹ்லான் பாகவி பேசுகையில், “திமுக கூட்டணியினர் தங்களது சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிக்கவில்லை. மாறாக பாஜக ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என பொதுமக்களிடம் தெரிவிக்கின்றனர். குறிப்பாக இந்தக் கருத்தை தெரிவித்து இஸ்லாமிய மக்களை அச்சுறுத்தி வாக்கு சேகரிக்கின்றனர்.
பாஜக வளர காரணமாக இருப்பது காங்கிரஸ் கட்சிதான். காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள்தான் பாஜகவின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் என்கிற நிலையை அவர்கள் உருவாக்கியுள்ளனர். ஒட்டுமொத்த இந்தியாவிலும் பாஜக இப்படிதான் வளர்ந்து கொண்டு இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் முக்கியமான தலைவர்கள் பாஜகவில் இணைந்து பாஜகவை வலுப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். மேலும் காங்கிரஸ் கட்சியினரே பாஜகவின் ’பி டீம்’ என மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சி பாஜகவுக்கு மாற்றுக் கட்சி அல்ல.
கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் ஏறத்தாழ 405 எம்எல்ஏக்கள் கட்சி மாறியுள்ளனர். பாஜகவை எதிர்ப்பவர்கள் என்று சொல்லும் திமுகவில் இருந்தும் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். கட்சி மாறியவர்களில் 200க்கும் மேற்பட்டோர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். அதில் 90 விழுக்காடு பேர் பாஜகவில்தான் இணைந்துள்ளனர்.
பாஜக வந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் வாக்களிக்கும் மக்கள், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பாஜகவின் நெருக்கடிக்கு அடிபணியாத அமமுக, சித்தாந்த ரீதியாக பாஜகவை தொடர்ந்து எதிர்த்துவரும் எஸ்டிபிஐ கட்சிகளுக்குத்தான் வாக்களிக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: ’அபூர்வ சகோதர்கள்’ கார் முதல் 'பாஜக பிரச்சார வேன்' வரை: வண்டி ஓட்டி லைக்ஸ் அள்ளும் கௌதமி!