மயிலாடுதுறை: மே தினத்தையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் திருஇந்தளூர் ஊராட்சி வேப்பங்குளம் பகுதியில் கிராம சபைக் கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்றத் தலைவர் சேட்டு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் ஊராட்சி மன்றத்தின் வரவு - செலவு கணக்குகளைப் பட்டியலிட்டு பேனர் வைக்கப்பட்டிருந்தது. குடிநீர், மின்விளக்கு, சாலை உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படவில்லை எனக் குற்றம்சாட்டிய கிராம மக்கள், வரவு செலவு கணக்கு குறித்து விளக்கம் கேட்டனர்.
ஆனால், ஊராட்சி செயலர் இந்த கூட்டத்தில் பங்கேற்காததால், ஊராட்சி மன்றத் தலைவர் சேட்டு வரவு செலவுகள் குறித்து முறையாக விளக்கம் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அவரிடம் கிராம மக்கள் வாக்குவாதம் செய்தனர்.
இதற்கிடையே, வீடுகளுக்கு மஞ்சள் நிறத்தில் தரமற்ற குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக கூறிய பொதுமக்கள், அந்த தண்ணீரை பாட்டிலில் எடுத்து வந்து காண்பித்தனர். தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். மேலும் அதிகாரிகளைக் கண்டித்து கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணித்த பொதுமக்கள், தர்ணா போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், "கிராம சபைக் கூட்டத்துக்கான எந்த விதிகளும் இங்கு பின்பற்றப்படவில்லை. ஊராட்சி மன்றக் கணக்காளர் வரவில்லை. கிராம சபைக் கூட்டம் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து, அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு பயிற்சி அளிக்க வேண்டும். கூட்டத்தில் எந்த கேள்வி கேட்டாலும், உரிய பதில் தரப்படவில்லை" என்றனர்.
இதையடுத்து வரவு செலவு கணக்கு குறித்து உரிய விளக்கம் அளிப்பதாகவும், தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஊராட்சி மன்றத் தலைவர் உறுதி அளித்ததால், போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: திமுக ஆட்சியில் கிராம சபைக் கூட்டங்கள் அதிகரிப்பு - கனிமொழி எம்.பி.!