மயிலாடுதுறை: குத்தாலத்தில் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். மேலும், 200 மாணவர்கள் ஆங்கில வழி கல்வி பயின்று வருகின்றனர். தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் ஆங்கிலத்தில் பேசுவதற்காக, தமிழ்நாட்டில் மொழிகள் ஆய்வகம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அத்திட்டம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இந்த பள்ளியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முதல் முறையாக மொழி ஆய்வகம் தொடங்கி வைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ள இப்பள்ளியில், தனியார் பள்ளி மாணவர்களும் சேர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு பல ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுவதாக பெற்றோர் தரப்பிலிருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, ஆங்கில வழி கல்வி கற்க 3 ஆயிரம் ரூபாய் முதல் 6 ஆயிரம் ரூபாய் வரையிலும், தமிழ் வழி கல்வி கற்க பல்வேறு கட்டணங்கள் என்று கூறி 800 ரூபாய் வரை பணம் வசூலிப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து குத்தாலத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது வெவ்வேறு அலுவலர்கள் வெவ்வேறு மாதிரியான தகவலை கூறுவதாகவும், இறுதியாக ஒரு அலுவலர் அரசு மாதிரிப் பள்ளி மட்டுமல்ல, மாவட்டத்தில் எந்த அரசுப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கைக்காக எந்த ஒரு பணமும் வசூலிக்கக் கூடாது என்றும், குத்தாலம் பள்ளியில் வசூலிப்பது தொடர்பாக தாங்கள் விசாரிப்பதாக தெரிவித்ததாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, தான் செல்போனில் பேசிய ஆடியோ ஆதாரங்களை சமூக வலைதளங்களில் சண்முகம் வெளியிட்டுள்ளார். இப்பள்ளியில் போதுமான ஆசிரியர்கள் நியமிக்கப்படாத காரணத்தால், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ஆங்கில வழி வகுப்புகளுக்கு 5 ஆசிரியர்கள், தூய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு மாதம் 60 ஆயிரம் வழங்க வேண்டிய நிலை உள்ளதாலும், பள்ளிகளில் இலவசமாக சைக்கிள், மடிக்கணினி உள்ளிட்டவைகளை மாணவர்களுக்கு வழங்குவதற்கு வெளியிலிருந்து எடுத்து வருவதற்கான போக்குவரத்துச் செலவுகள் மற்றும் விழாக்களுக்கு அமைச்சர், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் வருவதற்கான செலவுகள் செய்ய வேண்டியுள்ளதால் மாணவர்களிடம் கல்விக் கட்டணமாக வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணங்கள் அதிக அளவில் இருப்பதால் அரசுப் பள்ளியை நாடி வரும் மாணவர்களிடையே பெற்றோர் ஆசிரியர் கழகம் என்ற பெயரில் அரசுப் பள்ளிகளில் மறைமுகமாக கட்டணங்கள் வசூலிக்கப்படுவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, உடனடியாக முதலமைச்சர் மற்றும் கல்வித்துறை அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: ‘சுற்றுலாப் பயணிகளுக்கான வளர்ச்சிப் பணிகள் விரைவில் முடிக்கப்படும்’ - அமைச்சர் கா.ராமச்சந்திரன்!