மயிலாடுதுறை: தமிழ்நாடு அரசு சிறுதானிய உணவு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஆண்டை சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது. இதே போல் மாவட்ட நிர்வாகமும் சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவிலில் உள்ள கலைமகள் தனியார் கல்லூரியில் இன்று சிறுதானிய உணவு திருவிழா கொண்டாடப்பட்டது. இதில் இக்கல்லூரியின் மாணவிகள் கம்பு, கேழ்வரகு, சோளம், வரகு, திணை, சாமை உள்ளிட்ட சிறு தானியங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகளை வரிசையாக காட்சிப்படுத்தி இருந்தனர்.
இந்த உணவு திருவிழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கூறியதாவது, ”கம்பு, திணை, கேழ்வரகு போன்ற சிறுதானிய உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளுவதும், உடற்பயிற்சி மற்றும் சரியான நேரத்தில் தூங்குவதும் உகந்தது ஆகும். உணவு வகைகளில் சிறுதானியத்தின் பயன்பாட்டை அதிகரித்து கொள்ள வேண்டும்.
வளரும் பருவத்தில் குழந்தைகளுக்கு திருமண பாரம் வேண்டாம். எனவே குழந்தை திருமணத்தை ஆதரிப்பதும், நடத்தி வைப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும். குழந்தை திருமணம் தொடர்பான புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் - 1098, 1091, 181 ஆகிய எண்களை அழைக்கலாம். உங்கள் ரகசியம் பாதுகாக்கப்படும். தனிப்பட்ட இடத்திலோ அல்லது பொது இடத்திலோ வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் ஆதரவை “சகி” என்ற ஒருங்கிணைந்த சேவை மையத்தின் மூலம் பெறலாம்.
வன்முறையால் பாதிக்கப்ட்ட பெண்களுக்கு சட்டரீதியான உதவிகள், மருத்துவ ரீதியான உதவிகள், காவல்துறை ரீதியான உதவிகள், உளவியல் ரீதியான ஆலோசனைகளையும் மேற்கண்ட ஒருங்கிணைந்த சேவை மையம் மூலம் பெறலாம். ஒவ்வொரு குழந்தையின் பாதுகாப்பினை உறுதி செய்திட அனைத்து காவல் நிலையத்திலும் குழந்தை நேய பாதுகாவலர் உங்களுக்காக காத்திருக்கிறார்” என்று கூறினார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி சிறந்த சிறுதானிய உணவு பதார்த்தங்களை உருவாக்கிய மாணவிகளுக்கு கேடயம் வழங்கி பாராட்டினார். இதில் கல்லூரியின் நிர்வாக இயக்குனர் குடியரசு, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் புஷ்பராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் சுகிர்தாதேவி, ஆசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: மயிலாடுதுறையில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் 800 மரக்கன்றுகளை நட்டு வைத்த மாவட்ட ஆட்சியர்!