நாகை மாவட்டத்தில் ரூ.16 கோடி மதிப்பீட்டில் குடி மராமத்து பணி நடக்கின்றன. கொற்கை, திருமங்கலம், மணக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பணிகளை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ”தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு திட்டமான குடி மராமத்து பணி திட்டத்திற்கு நாகை மாவட்டத்தில் 82 பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு ரூ.16 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் 56 பாசன விவசாய சங்கத்தினர் கொண்டு பணிகள் நடைபெறுகின்றன. இந்த பணிகளை விவசாயிகள் ஒருங்கிணைந்து அவர்களே பாசன விவசாயிகள் குழு ஏற்படுத்தி நேரடியாக செய்து வருகின்றனர்.
அதன்படி தூர்வாருதல், கால்வாய்கள் சீரமைப்பது, தண்ணீர் ஒழுங்குமுறை செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை பொதுப்பணித் துறை பொறியாளர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடங்களை வருவாய்த் துறையின் மூலம் அளவீடுகள் செய்ய உத்தரவிடப்பட்டு உடனடியாக அதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. விவசாய சங்கங்களின் வங்கிக் கணக்கில் 15 நாட்களுக்கு ஒருமுறை பணிகளுக்கான பணம் வரவு வைக்கப்படும் என்று கூறினார்.