காவிரி டெல்டாவின் கடைமடை மாவட்டமான நாகையில் அரசு மருத்துவமனையுடன் கூடிய மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என மாவட்ட மக்கள் பல ஆண்டு காலமாக மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கைவிடுத்துவந்தனர்.
இதையடுத்து, நாகை மாவட்டம் ஒரத்தூர் பகுதியில் 367 கோடி ரூபாய் செலவில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நாகையை அடுத்துள்ள ஒரத்தூரில் நடைபெற்றுவருகிறது.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு புதிதாகக் கட்டப்படவுள்ள அரசு மருத்துவக் கல்லூரி, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இவ்விழாவில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
இவ்விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் இரவு திருச்சிக்கு வந்த முதலமைச்சர், காலை அங்கிருந்து நாகை வந்தார். மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவிற்காக ஏற்பாடுகள் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்தன. மேலும், நூற்றுக்கணக்கான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு: எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா ஏற்பாடுகள் தீவிரம்