மயிலாடுதுறை நகராட்சி 35ஆவது வார்டில் ஐந்து புது தெருக்கள் உள்ளன. இந்தத் தெருக்களில் மையப்பகுதியாக பஜனை மடம், காளியம்மன் கோயில் பகுதி உள்ளன. புதுத்தெருவில் அமைக்கப்பட்டிருந்த மழைநீர் வடிகால் பல ஆண்டுகளுக்கு முன்பே சிதைந்து போனதால், மழைக்காலங்களில் மழைநீர் வடிய வழியின்றி சாலையில் தேங்கி நிற்பது வாடிக்கையாகிவிட்டது.
தற்போது சாலைகள் உயர்த்தி போடப்பட்டதால் மையப்பகுதியான பஜனை மடம், காளியம்மன் கோயில் அருகே சாலையில் மழைநீர் வடிய வழியின்றி குளம்போல் தேங்கி நிற்கிறது. அது மட்டுமின்றி பஜனை மடம் அருகே குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீரில் பாதாள சாக்கடை கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் சாலையைக் கடந்துசெல்லும் பாதசாரிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
சாக்கடை நீர் கலந்த மழைநீரில் கால் வைக்க அச்சப்படும் சிறுவர்கள் ஆபத்தை அறியாமல் மின்சார கம்பியை பிடித்து சிரமப்பட்டு கடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மழைநீரில் பாதாள சாக்கடை கழிவுநீர் கலப்பதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுத்து சாலையை சீர்செய்து தரவும், பாதாள சாக்கடை நீர் வெளியேறுவதை தடுத்து, குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்றவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.