நாகப்பட்டினம் மயிலாடுதுறை அருகே மணல்மேடு சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள 110 கிராமங்களில் ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால் மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி தாலுகா வைத்தீஸ்வரன் கோயில் ஆகிய பகுதியிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவேண்டிய நிலை உள்ளது.
இதனால், 18 கிலோமீட்டர் தூரம் கடந்து மணல்மேடு பகுதிக்கு தீயணைப்பு வாகனங்கள் வருவதற்குள் தீ விபத்து ஏற்பட்ட வீடுகள் முற்றிலும் எரிந்துவிடுகின்றன. இந்நிலையில், மணல்மேட்டில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று 20 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துவந்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மணல்மேட்டில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் அமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு கோடியே 47 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டார். அதன்படி மணல்மேட்டில் தற்காலிகமாக தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் இன்று திறந்துவைத்தார்.
அதன் ஒரு பகுதியாக மணல்மேட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தை மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் வீ. ராதாகிருஷ்ணன் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் தொடங்கிவைத்தார். இதில் தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலர் சத்தியகீர்த்தி உள்ளிட்ட தீயணைப்புத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
தீ விபத்து ஏதேனும் ஏற்பட்டால் 04364 254 101 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இங்கு தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டதால் மணல்மேடு பகுதியிலுள்ள 110 கிராமங்கள் தீ விபத்திலிருந்து பாதுகாக்கப்படும். இந்தத் தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் உள்ளிட்ட 17 பேர் நியமிக்கப்படவுள்ளனர். மேலும், தற்காலிகமாக ஒன்பது பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 240 புதிய பேருந்துகள் - முதலமைச்சர் தொடக்கி வைப்பு