காரைக்கால் மாவட்டம், திருபட்டினத்தில் அமைந்துள்ள சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலின் மாபெரும் குடமுழுக்கு விழா கடந்த 14ஆம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கோயிலில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு தீபாராதனைகள் நடைபெற்றுவந்தன. இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுற்ற பின்னர் மேளதாள வாத்தியங்கள் முழங்க கலசங்கள் கோயிலைச் சுற்றி எடுத்துவரப்பட்டன.
அதனைத் தொடர்ந்து வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் ஓத, ஆலய மணி ஓசை ஒலிக்க, கோயிலில் உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மாபெரும் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.