மயிலாடுதுறை: மயிலாடுதுறை டவுன் எக்டென்ஸன் பகுதியில் வசித்து வருபவர் ’ரமணி’. இவருக்கு ’ரவிச்சந்திரன்’ என்ற மகனும் ’விஜயலட்சுமி’ என்ற மகளும் உள்ளனர். இருபத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விஜயலட்சுமி 11 மாத கைக்குழந்தையாக இருக்கும்போது, ரமணியின் கணவர் ராஜேந்திரன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு உறவினர்கள் எல்லாம் கைவிட்ட நிலையில், குடும்பத்தைக் காப்பாற்ற மயிலாடுதுறை மீன் மார்க்கெட்டில் மீன் கறியை விற்றுக்கொடுத்து, கழுவி சுத்தம் செய்து கொடுக்கும் கூலி வேலைக்குச் சென்றார். மீன் மார்க்கெட்டில் மீன் வாங்குபவர்கள் தரும் மீன்களை உரசி, செதில்களை நீக்கி அதைத் துண்டு துண்டாக வெட்டி சுத்தம் செய்து கொடுப்பது, ரமணியின் பணியாகும்.
இந்த நிலையிலும் தன் நகைகளையும் வீடுகளையும் விற்று, தன் மகளை ரஷ்யாவில் மருத்துவம் படிக்க வைத்து தற்போது மருத்துவர் ஆக்கியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மயிலாடுதுறை மாவட்டத்தில் தூர்வாரும் பணி மற்றும் இயந்திர நெல் நடவுப் பணிகளை ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அப்போது மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, திருக்கடையூரில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலுக்கு மீன் கழுவி சுத்தம் செய்து, தனது மகளை மருத்துவராக்கிய பெண்மணி ரமணி மற்றும் அவரது மகள் மருத்துவர் விஜயலட்சுமி, மகன் ரவிச்சந்திரன் ஆகியோரை நேரில் அழைத்து, தனது வாழ்த்துகளை முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பறையா என்ற வார்த்தையை பயன்படுத்திய அண்ணாமலை... வெடிக்கும் எதிர்ப்பு..