நாகப்பட்டினம் மாவட்டத்தில், நாகூர் தேசிய மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிவருபவர் அமுதா. இவர் வெளிப்பாளையம் பகுதியில் உள்ள தனது வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்தபோது அவ்வழியே தலைக்கவசம் அணிந்துகொண்டு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அமுதாவின் கழுத்திலிருந்த ஐந்து சவரன் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றனர்.
இருந்தபோதும், அமுதா இருவரிடமும் மல்லுக்கட்டி போராடியுள்ளார். உடனே கொள்ளையர்கள் அமுதாவை தாக்கிவிட்டு செயினை பறித்துக் கொண்டு தப்பியோடினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த வெளிப்பாளையம் காவல் துறையினர் கொள்ளையர்களை பிடிக்க முயற்சி செய்தனர், ஆனால் கொள்ளையர்கள் வேகமாகத் தப்பி ஓடினர்.
இதேபோல், வெளிப்பாளையம் காளியம்மன் கோயில் அருகே நின்றுகொண்டிருந்த பெண்ணிடமும் ஐந்து சவரன் தங்கச் செயினை கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர். நாகையில் அடுத்தடுத்து நடைபெற்ற கொள்ளைச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த வெளிப்பாளையம் காவல் துறையினர் அங்கிருந்த கண்காணிப்புக் கேமரா காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க : கேஸ் அலுவலகத்தில் கொள்ளை - சிசிடிவி காட்சியால் சிக்கிய திருடன்