நாகப்பட்டினம் மாவட்டம் பனங்குடியில் அமைந்துள்ளது சிபிசிஎல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம். பொதுத் துறை நிறுவனமான சிபிசிஎல் நிறுவனத்தில் பனங்குடி, உத்தமசோழபுரம், நரிமணம், திட்டச்சேரி பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் அங்கு ஒப்பந்தப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் சிபிசிஎல் ஆலையை விரிவாக்கம் செய்ய நிர்வாகம் முடிவு எடுத்து நிலம் கையகப்படுத்தப்படும் பணிகள் தற்போது நடந்துவருகின்றன. ஆலை விரிவாக்கத்தைக் காரணம்காட்டி சிபிசிஎல் நிர்வாக அலுவலர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வழங்கிவந்த 30 நாள் வேலைநாள்களை 15 நாள்களாக குறைத்துள்ளனர்.
இதனைக் கண்டித்து இன்று (ஜன. 04) ஒப்பந்தத் தொழிலாளர்கள் 80-க்கும் மேற்பட்டோர் சிபிசிஎல் ஆலையின் உள்ளே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்து ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
தங்களது கோரிக்கைகளை சிபிசிஎல் நிறுவனம் ஏற்காவிட்டால், சென்னையில் உள்ள சிபிசிஎல் நிறுவனம் முன்பு குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அவர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: திமுக பல கூறுகளாக உடையும் - அமைச்சர் க. பாண்டியராஜன்