நாகை மாவட்டம், மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் துலா மாதம் என்று அழைக்கப்படும் ஐப்பசி மாதத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி உள்ளிட்ட ஆறுகள் துலா கட்டத்தில் சிவனை வழிபட்டு புனித நீராடி தத்தம் பாவங்களிலிருந்து விடுதலை பெற்றார்கள் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
இதனால் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் காவிரி துலா கட்டத்தில் தீர்த்தவாரி நடைபெறும். அதேபோல், ஆடிப்பெருக்கு தினத்திலும் காவிரி தாய்க்கு படையலிட்டு துலா கட்டத்தில் உற்சாக வழிபாடு நடைபெறும்.
இத்தகைய சிறப்புவாய்ந்த மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்திற்கு, மேட்டூரிலிருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் இன்று (ஜூன் 22) மதியம் வந்தடைந்தது. பொங்கிவந்த காவிரி அன்னையை வரவேற்கும்விதமாக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் காவிரியில் இறங்கி வெடி வெடித்தும் நவதானியங்கள் வைத்து, பூரண கும்ப மரியாதையுடன் வணங்கி வழிபாடு நடத்தினர்.
அப்போது, கிராமிய நாடக கலைஞர்கள், விநாயகர், முருகன், சிவன், பார்வதி, அகத்தியர், காவிரித் தாய் வேடமணிந்து காவிரி நீரை வரவேற்றனர்.
இதையும் படிங்க:மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவைத்த முதலமைச்சர்!