ஒன்பது வருடங்களுக்குப் பின் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை பாசனத்திற்காகத் திறக்கப்பட்டது. இந்தத் தண்ணீர் நேற்று காலை கடைமடைப் பகுதியான நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு வந்தடைந்தது. திருவாலங்காடு காவிரி, விக்ரமன் ஆகிய ஆறுகளில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்தில் தண்ணீர் வந்தடைந்தது.
பின்னர் நீர்த்தேக்கத்திலிருந்து நொடிக்கு 712 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு கனஅடி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் விதிகளின்படி, காவிரி நீர் கடலுடன் கலப்பதற்கு முன்னதாக, மேலையூர் கடையணை பகுதிக்கு காவிரி நீர் சென்றுசேர்ந்த பின்னரே மற்ற கிளை ஆறுகள், வாய்க்கால்களுக்குப் பாசனத்திற்காகப் பிரித்து அனுப்பப்படும்.
இந்நிலையில், தரங்கம்பாடி தாலுகா பகுதிகளில் பாசனவசதி அளிக்கும் காவிரியின் கிளை ஆறுகளான வீரசோழனாறு, மஞ்சலாறு, மகிமலை உள்ளிட்ட ஆறுகளில் மதகுகள் சீரமைப்புப் பணிகளுடன் தடுப்பணைகள், தடுப்புச் சுவர்கள், சிறுசிறு பாலங்கள் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால், நடவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு உரிய நேரத்தில் தண்ணீர் வந்து சேருமா என்று விவசாயிகள் கவலையடைந்தள்ளனர்.
அதனால் உடனடியாகக் கட்டுமானப் பணிகளை விரைவாக முடித்து பாசனத்திற்கு காலதாமதமின்றி உரிய நேரத்தில் ஆறுகளில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று பொதுப்பணித் துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: குறுவை சாகுபடி தீவிரம்: 4% வட்டி நகைக்கடனை வழங்க வலியுறுத்தல்!