மயிலாடுதுறை: செருதியூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார் மகள் அபிராமி (25). இவர் மயிலாடுதுறை மூங்கில்தோட்டம் கன்னித்தோப்புத் தெருவைச் சேர்ந்த வினோத்குமார் என்பவரை, கடந்த 2017ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துள்ளார். பின்னர் கணவர் வினோத்குமார், மாமியார் புஷ்பவல்லி உள்பட குடும்பத்தினர் சிலர் அபிராமியை அடிக்கடி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் வினோத்குமாரை பிரிந்த அபிராமி, சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் தீபாவளிக்காக கடந்த வாரம் மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் குஞ்சிதபாதம் நகரில் உள்ள தனது தந்தையின் நண்பர் மணிவண்ணன் வீட்டுக்கு அபிராமி வந்துள்ளார். இதனை அறிந்த வினோத்குமார் அபிராமியை வீட்டிற்கு அழைத்துள்ளார்.
இதற்கு அபிராமி மறுப்பு தெரிவிக்க, கணவன் மனைவிக்கிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கணவர் வினாத்குமார், அவரது தாயார் புஷ்பவல்லி, புஷ்பவல்லியின் நட்பில் உள்ள நாகை பிசிஆரில் (சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு) இருக்கும் காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், புஷ்பவல்லியின் மருமகன் கார்த்திக் மற்றும் மகள் திவ்யா ஆகிய 5 பேரும் அபிராமி தங்கி இருந்த வீட்டுக்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அபிராமியை ஐந்து பேரும் தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அபிராமி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வினோத்குமார், காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேர் மீதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், 147, 294 (டி), 323, 354 மற்றும் 498 (யு) உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த மயிலாடுதுறை காவல்துறையினர், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் ராதாகிருஷ்ணன் என்பவர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றிவர். மேலும் மயிலாடுதுறை, மணல்மேடு காவல் நிலையங்களில் காவல் ஆய்வாளராக பணியாற்றியவர். இவர் தற்போது மருத்துவ விடுப்பில் உள்ளார்.
இதையும் படிங்க: 7 ஆம் வகுப்பு சிறுவன் ஆட்டோவில் கடத்தல்.. சாதுர்யமாக தப்பித்து ஓட்டம்..