நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்கு பொய்கைநல்லூர் கிராமத்தில் உள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 300 ஏக்கரில் கத்தரிக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது மகசூல் சீசன் என்பதால் அதிகளவிலான கத்தரிக்காய் இப்பகுதியில் விளைச்சல் கண்டுள்ளது.
இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் சரியான முறையில் கத்திரிக்காயை வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத சூழல் நிலவிவருகிறது. இதனால் கிலோ 25 ரூபாய் முதல் 30 ரூபாய்வரை விலைபோன கத்தரிக்காய்கள் தற்போது 10 ரூபாய் முதல் 15 ரூபாய்க்கு மட்டுமே உள்ளூர் காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.
இதனால் தாங்கள் கடன்பட்டு செலவு செய்த பணத்தைக்கூட எடுக்க முடியாமல் போய்விட்டதால் பயிர் செய்த கத்தரிக்காய்களை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்து தங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டுமென விவசாயிகள் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மது அருந்தி தொடர்ந்து தகராறு செய்த மகனை கொன்றவர் கைது!