நாகை புதுத்தெரு பகுதியைச் சேர்ந்த தாரிக், இவர் தனது வீட்டில் பஞ்சவர்ண கிளிகளை வளர்த்துவருகிறார். இந்நிலையில் நேற்றைய முன்தினம் அவரது வீட்டில் இருந்த 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சவர்ண கிளிகள் திருடு போயின. கிளியை திருடிவிட்டு சிறுவர்கள் தப்பி செல்வதை தாரிக் பார்த்துள்ளார். அதனைத் தொடர்ந்து, கிளிகளை திருடி சென்றது கிடாரங்கொண்டான் பகுதியைச் சேர்ந்த சிறுவன் முஸ்தபா என்பது தெரியவந்தது.
இதையடுத்து, கிளி உரிமையாளர் தாரிக்கும் அவரது நண்பர் பரக்கத்துல்லாவும் சிறுவனைப் பிடித்து, தம்பிதுரை பூங்கா அருகில் உள்ள தனது கடைக்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது சிறுவனிடம் அவர்கள் கேட்ட கேள்விக்கு முன்னுக்கு பின் முரணாக பதில் சொன்னதால் சிறுவனை கடையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சிறுவனை கடைக்குள் வைத்து பூட்டிவிட்டு தாரிக், பரக்கத்துல்லா ஆகியோர் தொழுகைக்காக சென்றுள்ளனர். இதனால் பயந்துபோன சிறுவன் கடையினுள் இருந்த பெஃபிகாலைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
பின்னர், பூட்டிய கடைக்குள் இருந்து சிறுவனின் அலறல் சத்தம் கேட்க, அக்கம்பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கடை உரிமையாளரை வைத்து பூட்டியிருந்த கடையை திறந்துள்ளனர். அங்கு மயங்கிய நிலையில் இருந்த சிறுவனை மீட்டு அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.