மயிலாடுதுறை: வடிவேலு என்பவர் தனக்குச் சொந்தமான ஆட்டோவின் பின்புறத்தில் பாரதப் பிரதமர் மோடியை விமர்சனம் செய்து பேனர் ஒட்டியிருந்தார்.
அதில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் 75 ஆண்டுகால சொத்துகளை விற்று நாசமாக்கவும், ராணுவம், நீதித்துறை, விண்வெளித்துறை மற்றும் பிரதமர், குடியரசுத்தலைவர் பதவிகளை தனியாருக்கு விற்று விடலாமா? என்றும் இதனை தேசத் துரோகம் என விமர்சித்தும் இருந்தார்.
இதுகுறித்து, மயிலாடுதுறை பாஜக நகரத் தலைவர் மோடி.கண்ணன் தலைமையில், பாஜகவினர் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து ஆட்டோ உரிமையாளர் வடிவேலு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருந்தனர்.
இப்புகாரைத் தொடர்ந்து காவல் துறையினர், ஆட்டோவையும் அதன் உரிமையாளரையும் காவல் நிலையம் கொண்டுவந்தனர்.
இதனைத்தொடர்ந்து ஆட்டோவில் இருந்த பேனர் அகற்றப்பட்டது. தன் தவறுக்கு வருந்தி, வடிவேலு மன்னிப்பு கோரியதைத் தொடர்ந்து அவர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.
பிரதமரை விமர்சித்து ஒட்டப்பட்ட பேனர் விவகாரத்தால் மயிலாடுதுறையில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: சீர்காழியில் பாரம்பரிய விதை நெல் திருவிழா!