இந்திய அளவில் பிரம்பு மற்றும் கோரையால் தயாரிக்கப்படும் பொருள்களுக்கு நாகை மாவட்டத்தை அடுத்துள்ள தைக்கால் கிராமம் புகழ் பெற்றது. இங்கு பிரதான தொழிலாக பிரம்பு மற்றும் கோரையால் தயாரிக்கப்படும் சேர்கள், கூடைகள், டி.வி. ஷோ கேஸ் உள்ளிட்ட கைவினைப் பொருள்களின் உற்பத்தியை நம்பி நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கில் தளர்வளிக்கப்பட்டது. மூன்றாவது ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட சில தளர்வுகளால் சிறுகுறு, நடுத்தர தொழில்கள் உள்ளிட்ட 34 வகையான தொழில்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
இருப்பினும், 144 தடை உத்தரவு காரணமாக வருமானம் வர வழியின்றி தைக்காலைச் சேர்ந்த கைவினைத் தொழிலாளர்கள் வேதனையோடு வாழ்ந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக தினக்கூலி வேலை செய்பவர்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.
தாங்கள் உற்பத்தி செய்த கூடை, பாய், முரம், மூங்கில் தட்டி போன்றவற்றை விற்பனை செய்வதற்கான வாய்ப்பு இல்லாததால், இந்த பொருள்களின் விற்பனையை மட்டுமே நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் வாழ்ந்துவரும் பத்தாயிரம் தொழிலாளர்களின் வாழ்க்கை ஊரடங்கால் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கைவினைஞரான சாகுல் ஹமீது கூறுகையில், "ஆண்டுதோறும் இந்த 3 மாதங்கள்தான் எங்களது பொருள்கள் அதிகம் விற்பனையாகும் காலமாகும். வெட்டிவேர் பாய்கள், குச்சி பாய்கள், கூடைகள் போன்றவை அதிக அளவில் விற்பனை செய்வோம். அதிலிருந்து வரும் பணத்தை சேமித்து வைத்தே வருடம் முழுவதும் எங்கள் இதர செலவுகள், எங்கள் பிள்ளைகளின் கல்வி செலவுகளை சமாளித்து வந்திருக்கிறோம்.
இதனிடையே தமிழ்நாடு அரசால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் யாரும் இங்கு பொருள்களை வாங்க வருவதில்லை. இதனால் ஒரு வேளை உணவும் கிடைக்காத கஷ்டமான நிலையில் உள்ளோம்” என வேதனை தெரிவித்தார்.
உற்பத்தி செய்த பிரம்புப் பொருள்களை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து, அரசுக்கு அதன் மூலமாக உள்நாடு மற்றும் அந்நிய செலாவணியாக கோடிக்கணக்கான ரூபாயை ஈட்டித்தந்தவர்கள் தற்போது அரசின் உதவியை எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கின்றனர்.
நமது ஈடிவி பாரத்திடம் தொடர்ந்து பேசிய தைக்கால் வியாபார சங்க தலைவர் முஸ்தப்பா, “நிவாரணமாக தமிழ்நாடு அரசு வழங்கிய ரூபாய் 1000 எங்களுக்கு எத்தனை நாள்களுக்கு வரும் எனத் தெரியவில்லை. இங்கு வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்களும் ரேஷன் கடைகளில் கிடைக்கும் அரிசியை வைத்தே வாழ்க்கையை நடத்திவருகிறோம். ஒரு ரூபாய்கூட கையில் இல்லாத வறுமை நிலைமையில் இருக்கிறோம். இந்த இக்கட்டான சூழ்நிலையில், எங்களுக்கும் நிவாரணம் வழங்கி நலிவடைந்திருக்கும் எங்கள் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காக்க அரசு முன்வர வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், அரசு கூடுதலாக நிவாரணம் வழங்கி நலிவடைந்திருக்கும் தங்களின் வாழ்வாதாரத்தை காக்க முன்வர வேண்டும் என பிரம்பு கைவினைப் பொருள்கள் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க : வாழ்வாதாரம் பாதிப்பு: நிவாரணம் கேட்கும் பூட்டு உற்பத்தி தொழிலாளர்கள்