நாகை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நாகை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் மேற்கொண்ட சோதனையில் 62 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று மாலை நாகை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தஞ்சை சரக துணை போக்குவரத்து ஆணையர் உதயகுமார் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் நாகை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பெறப்பட்ட லஞ்சப் பணத்தின் பங்கு தஞ்சை சரக துணை போக்குவரத்து ஆணையர் உதயகுமார் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் ரமேஷ்குமார் தலைமையிலான அலுவலர்கள், துணை போக்குவரத்து ஆணையர் உதயகுமாரிடம் ஒரு லட்சத்து 5 ஆயிரமும், மோட்டார் வாகன ஆய்வாளர் தனபாலனிடம் 20 ஆயிரத்து 900 ரூபாயும், அலுவலக உதவியாளர் கோபிநாத்யிடம் 49 ஆயிரத்து 170 ரூபாய் என மொத்தம் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 70 ரூபாய் கணக்கில் வராத ரொக்க பணத்தை கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனா காலத்துல கல்யாணம் பண்ணாலும்...கல்யாண சாப்பாட கரெக்ட்டா போடுவோம்!