நாகையில் கீழ்த்திசை நாடுகளின் லூர்து நகர் என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற அன்னை வேளாங்கண்ணி மாதா கோயில் ஆண்டு பெருவிழா இன்று தொடங்கி செப்டம்பர் 8ஆம் தேதி வரை பத்து நாள்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதில், பங்கேற்பதற்காக கேரளா, கோவா, கர்நாடகா, ஆந்திரா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் வேளாங்கண்ணிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இன்று நடைபெறும் கொடியேற்ற நிகழ்ச்சியில் மாதா திருவுருவம் பொறித்த கொடி வேளாங்கண்ணி நகர் முழுவதும் ஊர்வலமாக எடுத்து வரப்படும். அதனை தொடர்ந்து, மாலை 6.30 மணியளவில் தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் கொடியை புனிதம் செய்தபின் கொடியேற்றம் நடைபெறுகிறது.
இதனால் வேளாங்கண்ணியில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக, பேராலய தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார். மேலும் தீவிரவாத அச்சுறுத்தல் எதிரொலியாக பேராலயம் முழுவதும் இரண்டாயிரத்து 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.