மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சில வாக்குச்சாவடிகளில் மாம்பழம் சின்னம் பொறிக்கப்பட்ட கைப்பையை வாக்குச்சாவடி முகவர்களிடம் கொடுத்தனுப்பி பூத்துக்கு உள்ளேயே வாக்குச் சேகரிக்கும் பணியில் வாக்குச்சாவடி முகவர்கள் ஈடுபட்டதாக அமமுக வேட்பாளருக்குத் தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலை அடுத்து மயிலாடுதுறை அமமுக வேட்பாளர் கோமல் அன்பரசன் மணல்மேடு அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்குச் சென்று வாக்குச்சாவடி மையத்திலிருந்த முகவர் ஒருவர் மாம்பழம் அச்சடிக்கப்பட்ட பை வைத்திருப்பதைக் கண்டுபிடித்தார். அதன்பின் அந்த முகவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின் அங்கிருந்த அலுவலர்களிடம் இதை எவ்வாறு அனுமதித்தீர்கள் எனக் கேள்வியெழுப்பினார். இது குறித்து தகவலறிந்த மணல்மேடு காவல் துறையினர் விரைந்துவந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்படாத அமமுக வேட்பாளர் வாக்குச்சாவடியின் வாசலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பை கொண்டுவந்த முகவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் துறையினர் கூறிய பின் அமமுக வேட்பாளர் கோமல் அன்பரசன் அங்கிருந்து சென்றார்.