மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை கிராமத்தில் அம்பேத்கர் பிறந்த நாளன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் வேலு.குபேந்திரன் தலைமையில் திராவிடர் விடுதலைக் கழகம், பகுஜன் சமாஜ் கட்சியினர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்ற பலகையை பொது இடத்தில் பொருத்த முயன்றபோது மாற்று சமூகத்தினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தை நேற்று (ஏப்.21) மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், சோழம்பேட்டை கிராமத்தில் நற்பணி மன்றம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதாக அறிவித்து அங்கு மன்ற நிர்வாகிகள் கூடினர். மேலும், நற்பணி மன்ற பலகையை பொருத்த ஏற்பாடு செய்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணிக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், நற்பணி மன்ற பலகையை பொருத்த காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.
இதையடுத்து, தடையை மீறி நற்பணி மன்ற பலகையை பொருத்த முயற்சித்த நற்பணி மன்ற நிர்வாகிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் மற்றொரு இடத்தில் பேனரை வைத்து மாலை அணிவித்தனர். உடனடியாக காவல்துறையினர் பேனரை அப்புறப்படுத்தினர். முடிவில் வட்டாட்சியர் முருகானந்தம், டிஎஸ்பி பிலிப் கென்னடி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி தேர்தல் முடிவுக்கு பின்னர் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததன் பேரில் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: பட்டாசுக்கடை விபத்தில் உயிரிழந்த சிறுவர்களின் தாய் தற்கொலை