நாகப்பட்டினம் மாவட்டம் செல்லூரில் உள்ள சுனாமி குடியிருப்பில் பூம்பூம் மாட்டுக்காரர்கள் என்று அழைக்கப்படும் ஆதியன் பழங்குடி சமூக மக்கள் ஏராளமானோர் வாழ்ந்துவருகின்றனர். அவர்களுக்கு மாட்டினை அலங்கரித்து வீடுகள்தோறும் சென்று குறி (வாக்கு) சொல்லி அதன்மூலம் வருமானம் ஈட்டுவதுதான் தொழில்.
நாளடைவில் அவர்களின் தொழில் மங்கிவிட்டது. அதனால் அவர்களில் பலர் நெகிழிப் பொருள்கள் விற்பது, பழைய பட்டுத்துணிகள் வாங்கி விற்பது, வளையல், ஊசி-பாசி விற்பது உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டுவந்தனர். அதுவும் தற்போது கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுவிட்டது.
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தவித்துவந்த அவர்களுக்கு சமூக செயற்பாட்டாளர் வானவில் ரேவதி என்பவர் கூட்டுறவுக் கடன் சங்கத் தலைவர் தங்க கதிரவன் உதவியுடன் 12 கறவை மாடுகள் வாங்கித் தந்திருக்கிறார். அதன்மூலம் அவர்கள் பால்கொள்முதல் செய்து ஒருங்கிணைந்து பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கத்தில் விற்பனை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன் அப்பகுதியில் பால் கொள்முதல், விற்பனை மையம் அமைக்க நடவடிக்கை எடுத்து மையத்தையும் அமைத்தார். அதனை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி நாயர் இன்று (ஆக. 21) தொடங்கிவைத்தார். தற்போது சமூக செயற்பாட்டாளர் வானவில் ரேவதியை அப்பகுதி மக்கள் அனைவரும் பாராட்டிவருகின்றனர்.
இதையும் படிங்க: 2 ஆதரவற்றோர் உடல்களுக்கு இறுதிச்சடங்கு நடத்திய சமூக சேவகர்!