உலகை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் பெருந்தொற்று இந்தியா முழுவதும் கடந்த 25 நாள்களாக தீவிரமாகப் பரவி வருகிறது. இரண்டாம் கட்ட பரவல் அபாயத்தை அடைந்திருக்கும் தமிழ்நாட்டில் அதன் தீவிரத்தைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் மே 3ஆம் தேதிவரை முழுமையான ஊரடங்கு தமிழ்நாடு அரசால் நீட்டிப்புச் செய்யப்பட்டுள்ளது.
சிவப்பு குறியீட்டுப் பகுதிகள் அதிகமாக அறிவிக்கப்பட்டிருக்கும் தமிழ்நாட்டில் அதன் தாக்கத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர பரவுதலை அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த முன்னெச்சரிக்கைப் பணிகளில் அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் முனைப்போடு செயலாற்றி வருகின்றன. காவல் துறை, சுகாதாரத் துறை, வருவாய் துறை, பள்ளிக் கல்வி துறை என அனைத்துத் துறைகளும் இந்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
பெருநகரங்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என தமிழ்நாடு முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உள்ள பகுதிகள், சிகிச்சை பெறும் மருத்துவமனைகள் உள்ளிட்ட பொது இடங்களில் கிருமி நாசினி தெளிப்பது, துப்புரவு செய்வது போன்ற முன்னெடுப்புகளில் தமது உயிரையும் பொருட்படுத்தாது தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் போரில் முன்னணி வீரர்களாக களத்தில் செயலாற்றிவரும் தூய்மைப் பணியாளர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பிரிவினர் நன்றித் தெரிவித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, இன்று பூம்புகார் தொகுதி காவிரிப்பூம்பட்டினம், வானகிரி, மேலையூர் ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை அதிமுகவைச் சேர்ந்த பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பவுன்ராஜ் வழங்கினார்.
தூய்மைப் பணியாளர்களுக்கு அவர்களது பணியினை ஊக்குவிக்கும் வகையில் கையெடுத்து கும்பிட்டு வணங்கி தூய்மைப் பணியாளர்களின் தொண்டினைத் தொடர வேண்டுமென சட்டப்பேரவை உறுப்பினர் பவுன்ராஜ், கேட்டுக் கொண்டு அவர்களுக்கு தலா 1000 ரூபாய் நிவாரணம், அத்தியாவசியப் பொருட்களான அரிசி, காய்கறி, கரோனா நோய் தொற்றைத் தடுக்கும் கபசுரக் குடிநீர் பொடி, பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.
அந்த நிகழ்வின்போது, தூய்மைப் பணியாளர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய வழிமுறைகளை தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்களிடம் சுகாதாரத் துறையைச் சேர்ந்த ஊழியர் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரத் துறையினர், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க : ‘கரோனா பரிசோதனைக் கருவிகள் விலை என்ன? வெளிப்படைத்தன்மை வேண்டும்’ - ஸ்டாலின்